திங்கள், 3 செப்டம்பர், 2018

ஆளவந்தார் அருளிச்செய்த முக்தகம்

ஆளவந்தார் பெருமாள் கோவிலுக்கு எழுந்தருளின காலத்தில், யாதவப்ரகாசர் பக்கலிலே வேதாந்தம் அதிகரித்துக் கொண்டிருந்த உடையவர் விரைவில் ஸித்தாந்த ப்ரவர்த்தகர் ஆகவேண்டுமென்று, தேவப் பெருமாளுடைய திருவடிகளில் இந்த ஸ்லோகத்தை அநுஸந்தித்தவாறே ப்ரபத்தி பண்ணினாரென்றும்அப்போதாக அவதரித்த ஸ்லோகம் இது என்று பெரியோர்கள் பணிப்பர்கள்.

தேவப்பெருமாள் விஷயமாக ஆளவந்தார் அருளிச்செய்த "முக்தகம்". காஞ்சி அண்ணங்கராசார்யர் ஸ்வாமி பதிப்பித்த "நித்யாநுஸந்தேய ஸ்தோத்திரமாலைஸ்ரீகோசத்திலிருந்து எடுக்கப்பட்டது.

யஸ்ய ப்ரஸாதகலயா பதிரச்ருணோதி பங்குப்ரதாவதி ஜவேந ச வக்தி மூக: |
அந்தப்ரபச்யதி ஸூதம் லபதேச வந்த்யா தம் தேவமேவ வரதம் சரணம் கதோஸ்மி ||

(கருத்து)
பேரருளாளப் பெருமாளுடைய அநுக்ரஹலேசத்தினால் செவிடனும் செவி பெறுவான்முடவனும் விரைந்தோடுவான்ஊமையும் பேசவல்லவனாவான்குருடனும் காணப் பெறுவான்மலடியும் மக்கள் பெறுவாள்இப்படிப்பட்ட அநுக்ரஹம் செய்தருளவல்ல பேரருளாளப் பெருமாளை (நான்தஞ்சம் பற்றுகிறேன்.   

மலையாள நாட்டு திவ்ய தேசங்கள் - Travel Planner

சென்னையிலிருந்து தினமும் இரவு 8:25 மணி அளவில் புறப்படும் "மங்களூரு மெயில்" என்கின்ற ரயிலை பிடிக்கவும்.

முதல் நாள்:
அதிகாலை 6 மணி அளவில் மங்களூரு மெயில் பட்டாம்பி (பாலக்காடு ஜில்லா) என்கின்ற ரயில் நிலையத்துக்கு வந்து சேரும். அங்கே இறங்கிக் கொள்ளவும். ரயிலடியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் "திருவித்துவக்கோடு" என்கின்ற திவ்ய தேசம் அமைந்துள்ளது. கேரள வாசிகள் இந்த திவ்ய தேசத்தை "திருமிட்டகோடு" என்று அழைப்பார்கள். இந்த திவ்ய தேசத்தை ஒட்டி பாரத்தப்புழை என்கின்ற நதி ஓடுகிறது. அங்கே ஸ்நானம் செய்து கொள்வதற்கு வசதி உண்டு. சிறிய ஊர் என்பதால் தங்கும் வசதிசத்திர வசதி எல்லாம் இருப்பதைப் போல் தெரியவில்லை.

திருவித்துவக்கோட்டில் சேவை முடித்துக் கொண்டு அங்கிருந்து திருநாவாய் என்கின்ற திவ்ய தேசத்திற்கு செல்லலாம். இந்த திவ்ய தேசம் திருவித்துவக்கோட்டில் இருந்து ஒரு 35 கி.மீ. தூரத்தில் உள்ளது. திருநாவாய்க்கு குட்டிப்புரம் என்கின்ற ஊர் மார்கமாக செல்ல வேண்டும். திருநாவாய் பித்ரு கர்மங்களுக்கு பெயர் போன ஸ்தலம் என்பதால் தங்கும் வசதிகுளியல் -கழிப்பறை வசதி எல்லாம் உண்டு. திருவரங்கூர் தேவஸ்வோம் போர்டு என்கின்ற அறக்கட்டளை திருநாவாயில் ஒரு சத்திரம் நடத்துகிறது. அங்கே தங்கி இளைப்பாறிக் கொள்ளலாம். ஒரு பதினோரு மணி அளவில் அனைத்து மலையாள நாட்டு திவ்ய தேசங்களிலும் சேவை முடிந்து விடும். அதற்கு பிறகு சாயங்காலம் 5 மணிக்கு மேல் தான் சேவை தொடங்கும். எனவே முதல் நாள் காலையில் இவ்விரண்டு திவ்ய தேசங்களையும் தரிசித்து விடுதல் உத்தமம்.

திருநாவாயிலிருந்து குட்டிப்புரம் மார்கமாக குருவாயூர் சென்று அன்றிரவுக்குள் அங்கு தரிசனத்தை முடித்துக் கொள்ளுங்கள். குருவாயூர் திருநாவாயிலிருந்து 47 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. ஒரு ஐந்து மணி அளவில் குருவாயூர் சேவை முடித்துக் கொண்டு அங்கிருந்து திருச்சூர் வந்து இரவு தங்கிக் கொள்ளுங்கள்.

இரண்டாம் நாள்:
திருச்சுரிலிருந்து விடியற்காலையிலேயே புறப்பட்டு விடுங்கள். முதலில் செல்ல வேண்டிய ஸ்தலம் திருமூழிக்களம். கேரளவாசிகள் மூழிக்குளம்” என்று இத்தலத்தை அழைக்கிறார்கள். திருச்சூரிலிருந்து சுமார் 50 கி.மீ. யாத்திரை செய்தால் அங்கமாலி ரயிலடிக்கு வந்துவிடலாம். அங்கமாலி ரயிலடியிலிருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மூழிக்குளம் ராமாயண வரலாறு பாடும் நான்கு கேரள நாட்டு திருக்கோவில்களில் ஒன்று. இத்தலத்தை ஸ்ரீ லக்ஷ்மண க்ஷேத்ரம் என்றும் மக்கள் அழைப்பதுண்டு. ஸ்நானம் செய்ய வேண்டியவர்கள் கோவிலுக்கருகே பாயும் பாரதப்புழை நதியில் செய்து கொள்ளலாம். திருமூழிக்களத்தில் தங்கும் வசதிகளோகுளியல்-கழிப்பறை வசதிகளோ கிடையாது.

திருமூழிக்களம் சேவை முடித்துக் கொண்டு மலா என்கின்ற ஊர் மார்கமாக குலசேகர அழ்வார் அவதார ஸ்தலமான திருவஞ்சிக்களம் செல்லுங்கள். இந்த ஸ்தலம் TKS புரம் என்று அழைக்கப்படுகிறது. மலாவிலிருந்து TKS புரத்துக்கு கொடுங்கல்லூர் தாண்டி செல்ல வேண்டும். அங்கே ஸ்ரீனிவாச பெருமாள் மற்றும் ஆழ்வார் சேவை ஆன பிறகு வந்த வழியிலேயே திரும்பி ஆலுவா (Alwaye) வந்தடையுங்கள். அங்கிருந்து 11 கி.மீ. தொலைவில் கொச்சின் அறிவியல் மற்றும் பொறியியல் பல்கழைக்கழகம் (CUSAT) அருகில் அமைந்துள்ள அடுத்த திவ்யஸ்தலமான திருக்காட்கரையை நோக்கி சென்றடையலாம். இத்தலத்தை த்ரிக்காக்கரா” என்னும் வாமன க்ஷேத்ரம்” என்னும் ஊர்க்காரர்கள் அழைக்கின்றார்கள். இத்தலங்களுக்கு ரயிலடிகலிருந்து செல்ல ஆட்டோக்கள் கி.மீ. கு 14 ரூபாய் என்கின்ற அடிப்படையில் கிடைக்கின்றன. பதினோரு மணிக்கு முன் தரிசனத்தை முடித்துக் கொள்ளுங்கள். இது சாத்தியமில்லை எனில் சௌகரியம் கருதி TKS புரம் பயணத்தை கைவிட்டுவிடலாம்.

அலுவாவிலிருந்து 82 கி.மீ. தூரத்தில் இருப்பது கோட்டயம். கோட்டயத்திலிருந்து 20 கீ.மீ. தூரத்தில் இருப்பது சங்கனாச்சேரி. அங்கிருந்து திருக்கடித்தானம் என்கின்ற திவ்ய தேசத்துக்கு செல்லுங்கள். மாலை 5 மணிக்கு கோவில் திறந்த உடன் தரிசனம் முடித்துக்கொண்டு கோட்டயம் திரும்பி விடுங்கள். அல்லது திருவல்லா கோவிலுக்கு எதிரே உள்ள அரசு கெஸ்ட் ஹவுசில் இடம் கிடைத்தால் (தொ. எண் : 0469-2621321) இரவு உறக்கத்திற்கு கோட்டயம் திரும்ப செல்ல வேண்டிய அவசியமில்லை.

மூன்றாம் நாள்:
அதிகாலை எழுந்தவுடன் அடுத்த திவ்ய தேசமான திருவல்லவாழ் (திருவல்லா வல்லப க்ஷேத்ரம்) திவ்ய தேசம் சென்றடையுங்கள். இந்த ஸ்தலம் நம்மாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வாரால் பாடபெற்ற ஸ்தலமாகும். திருவல்லவாழ் தொடங்கி திருவண்வண்டூர்திருசிட்டாறு (செங்கன்னூர்திருசெங்குன்றுர் என்றும் அழைப்பதுண்டு)திருப்புலியூர் மற்றும் திருவாரன்விளை என்கின்ற திவ்ய தேசங்களுக்கு அடியேன் மேற்கூறிய அதே அடையில் (order) சென்று தரிசியுங்கள். மதியம் 12 மணிப்போல் அனைத்து திவ்ய தேசங்களிலும் சேவை முடிந்துவிடும். செங்கன்னூர் (அ) திருவல்லாவுக்கு திரும்ப வந்து இளைப்பாறிக்கொள்ளலாம்.

செங்கன்னூரில் இருந்து திருவனந்தபுரம் 165 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் நோக்கி பயணம் செய்து அங்கேயே இரவு தங்கிக்கொள்ளவும்.

நான்காம் நாள்:
திருவனந்தபுரம் கோவில் அதிகாலை 5 மணிக்கே திறந்துவிடும். அதனால் சீக்கிரம் எழுந்து தரிசித்தல் உத்தமம். 7:30 மணியிலிருந்து 8:30 மணி வரை திருவரங்கூர் சமஸ்தானத்தின் ராஜா ப்ரத்யேகமாக தரிசிப்பார் என்பதால் நமக்கு சேவை கிடைக்காது. எனவே அதற்கு முன்னரே சேவித்து விடுங்கள்.

அநந்தபத்மநாப ஸ்வாமி சேவை ஆன பிறகு நாகர்கோவில் வழியில் மார்த்தாண்டம் நோக்கி செல்லுங்கள். இது சுமார் ஒரு 50 கி.மீ. யாத்திரை. மார்த்தாண்டத்தில் இறங்கிக்கொண்டு அங்கிருந்து திருவாட்டாறு நோக்கி பயணியுங்கள். ஆதிகேசவ பெருமாள் திருத்தலத்துக்கு செல்ல டவுன் பஸ் மற்றும் ஆட்டோ வசதிகள் கிடைக்கும். பன்னிரண்டு மணிக்கு முன்னரே அங்கேயும் சேவை முடிந்து விடும். சற்று இளைப்பாறிக்கொண்டு நாகர்கோவில் நோக்கி பயணியுங்கள். சாயங்காலம் மணிக்கு தான் திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்) கோவில் திறக்கும். இந்த திவ்ய ஸ்தலம் நாகர்கோவிலிருந்து வடக்கே கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கே தரிசனம் முடித்துக்கொண்டு நாகர்கோவில் (அ) திருவனந்தபுரம் வந்து விடுங்கள். நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு மாலை 6 மணிக்கு மேல் ரயில்கள் கிடையாது. திருவனந்தபுரம் அல்லது திருநெல்வேலி சென்று தான் இரவு ரயிலை பிடிக்க வேண்டும். சென்னைக்கு பஸ்ஸில் செல்ல வேண்டுமென்றால் நாகர்கோவிலிலிருந்து நேரடியாகவே செல்லலாம்.

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

திருவாய்மொழி நூற்றந்தாதி


ஸ்ரீவைஷ்ணவர்களால் நித்யம் அநுஸந்தி3க்கப்படும் திவ்யப் பிரபந்தங்களில் ஸ்ரீ மணவாள மாமுநிகள் இயற்றிய திருவாய்மொழி நூற்றந்தாதி விலக்ஷணமான பிரபந்தமாக திகழ்கிறது. கிருஷ்ண பக்தியின் உருவகமான நம்மாழ்வார், எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபைக்கு பாத்திரபூ4தராகி, இப்படி 4கவத்3 ப்ரஸாத3த்தாலே ஐயம் திரிபு அற தத்வ த்ரயங்களை கற்றுணர்ந்து, 4கவத் ப்ரீத்தி ப்ரகர்ஷத்தாலே பாடிய ஸாம வேத3 ஸாரமாகிய திருவாய்மொழியை, ஸம்ஸாரி சேதனர்களும் எளிதாகக் கற்று, எம்பெருமானின் குணாநுப4வத்திலும், ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளிலும் தே, கால, நியமமின்றி ஈடுபடுவதற்கு ஹேதுவாய், மாமுநிகள் இதை பிரபந்தமுகே2 அருளிச்செய்திருக்கிறார். இந்தப் பிரபந்தத்திற்கு தனியனிட்டுள்ள ஆசார்யர்களும் இதனை அல்லும் பகலும் கால நியமமின்றி அநுஸந்தி3க்க வேண்டுமென்றும், பாலோடமுதன்னவாயிரமான திருவாய்மொழியின் உள்ளுரைப் பொருள்களை வெளியிடுவதால் இதனை இடைவிடாமல் பானம்பண்ண வேண்டுமென்றும் பறைசாற்றியுள்ளனர்.

நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதா3யத்தில், திருவாய்மொழி திவ்யப் பிரபந்தத்தின் அர்த்த விசேஷங்கள் ஸ்ரீமந் நாதமுனிகள் தொடங்கி ஓராண்வழி ஆசார்யர்களால் ஸம்ரக்ஷிக்கப்பட்டு ஸ்ரீமணவாள மாமுநிகளுக்கு தம்முடைய ஆசார்யர் ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளையின் மூலம் ப்ராப்தமாயிற்று. இதை மாமுநிகளே தம்முடைய உபதேச ரத்தினமாலை பிரபந்தத்தில் தெருளுற்ற ஆழ்வார்களின் சீர்மையையும் அவர்கள் அருளிச்செய்த ஸ்ரீஸூக்திகளின் ஆழ்பொருள்களையும் ஸ்ரீமந் நாதமுநிகள் தொடங்கி வந்த குரவோர்களே நன்கு அறிந்திருந்தார்கள் என்றும், திருவாய்மொழிக்கு வ்யாக்யாநமிட்டு அதன் அர்த்தவிசேஷங்களை எடுத்துரைத்த ஆசார்யர்களை குணவாளர்கள் என்றும் கொண்டாடியுள்ளார். திருவாய்மொழி நூற்றந்தாதிக்கு வ்யாக்யாநமிட்ட பிள்ளைலோகம் ஜீயர் என்கிற ஆசார்யர், இந்த திருவாய்மொழி காலக்ஷேப பரம்பரையை ஸ்ரீமந் நாதமுநிகளிடமிருந்து தொடங்கிய நீர்ப்பெருக்காக பாவித்து, இந்த நீர்பெருக்கு ஆளவந்தார், எம்பெருமானார், பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை போன்ற மஹாசார்யர்களான துறைகளை கடந்து, ஸ்ரீ மணவாள மாமுநிகள் என்னும் ஏரியில் தங்கியதாக வர்ணிக்கிறார். இவ்வாறு திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களுக்கு தங்குமிடமாக இருந்த வைபவ செருக்குடைய மாமுநிகளிடமிருந்து இந்த பிரபந்தம் அவதரித்திருப்பது திருவாய்மொழி நூற்றந்தாதிக்கு மேலும் மெருகு சேர்க்கும் விஷயமாக அமைந்திருக்கிறது.

நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழியில் அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களும் அறியவேண்டிய ஐம்பொருள்கள் அடங்கியிருப்பதாக நம் பூர்வாசார்யர்கள் காட்டியிருக்கின்றனர். இந்த ஐம்பொருள்களான ஜீவாத்ம ஸ்வரூபம், பரமாத்ம ஸ்வரூபம், உபாய ஸ்வரூபம், விரோதி4 ஸ்வரூபம் மற்றும் 2 ஸ்வரூபமானவை முறையே அர்த்த பஞ்சகம் என்றும் அழைக்கப்படுகின்றன. மோக்ஷத்தில் இச்சையுடைய ஒரு முமுக்ஷுவுக்கு அர்த்த பஞ்சக ஜ்ஞாநம் அத்யாவசியமாம். இந்த ஜ்ஞாநம் திருவாய்மொழி திவ்ய பிரபந்தத்தில் பிரதிபாதி3க்கப் பட்டிருப்பதால் நம் பூர்வர்கள் திருவாய்மொழியின் அர்த்தாநுஸந்தா3னத்திலேயே எப்பொழுதும் திளைத்திருந்தார்கள் என்று குரு பரம்பரை நூல்களைக் கொண்டு நாம் அறிகிறோம். இப்படி நம்மாழ்வாரின் அவதார ஸ்தலமான ஆழ்வார் திருநகரியில் அவதரித்து, பராங்கு பாத3 4க்தரான எம்பெருமானாரிடம் அதீத ப்ராவண்யம் கொண்டிருந்து, திருவரங்கனுக்கு திருவாய்மொழியின் ஈடு வ்யாக்யாநத்தை காலக்ஷேபமாக அருளிச்செய்து, ஈட்டுப் பெருக்கர் என்கிற திருநாமம் கொண்டிருந்த மாமுநிகளால் இந்த பிரபந்தம் அருளிச்செய்யப்பட்டிருப்பது இந்தக் கலைக்கு மேலும் பெருமை சேர்க்கும் விஷயமாக அமைந்திருக்கிறது. இப்படி திருவாய்மொழியாம் திராவிட வேதத்தின் ஆழ்பொருள்களை பனுவலிட்டுக் காத்த பெருந்தகையான மாமுநிகளை அவரது அஷ்டதி3க்க3ஜங்களில் ஒருவரான அப்பிள்ளார் மெச்சுமிடத்தில் மாற்றற்ற செம்பொன் மணவாள மாமுநிவன் வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளியல்லவோ தமிழாரணமே என்று வலியுறுத்திக் கூறுவதற்கான நோக்கம் இந்த பிரபந்தத்தில் நம்மால் நன்கு உணர முடிகிறது.

விதவாக் ஶிகாமணியின் வாகாம்ருதத்திலிருந்து அவதரித்த இந்தப் பிரபந்தம் ஆச்சர்யமான ஓர் அமைப்பை கொண்டிருக்கிறது. ஒவ்வொரு திருவாய்மொழி பதிகத்திற்கும் தலா ஒரு பாட்டு என்கிற விகிதத்தில் நூறு பாட்டுகள் கொண்டுள்ள இந்தப் பிரபந்தம், மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றான வெண்பா நடையில் அமைந்துள்ளது. திருவாய்மொழி திவ்யப் பிரபந்தத்தின் அமைப்புக்கேற்ப அதன் ஸாரத்தை யுரைக்கும் இந்த பிரபந்தத்தையும் மாமுநிகள் அந்தாதியிலிட்டு அருளிச்செய்துள்ளார். ஒவ்வொரு பாடலிலும் நம்மாழ்வாரின் ஒரு பெயரை இணைப்பதோடு அல்லாமல், இந்த கட்டுப்பாடுகளுக்கிடையில் திருவாய்மொழி பதிகத்தின் அர்த்தத்தையும் அருளிச்செய்திருப்பதன் அழகு இதை தமிழ் இலக்கியத்திற்கே பெருமை சேர்க்கும் கலையாக உயர்த்தியிருக்கிறது.

திருவாய்மொழியின் உட்பொருள்கள் ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் இயற்றிய திரமிடோபநிஷத் ஸங்க3தி மற்றும் ஸ்ரீமத் வேதாந்த தேசிகன் இயற்றிய திரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளி எனும் வடமொழி க்ரந்தங்களில் தொகுத்துரைக்கப் பட்டிருக்கின்றன. அவ்வாறு இருக்க, மாமுநிகள் இந்த ப்ரபந்தத்தை அருளிச்செய்ததற்கான நான்கு காரணங்களை ஸ்ரீ பிள்ளைலோகம் ஜீயர் தம் வ்யாக்யாநத்தில் முன்வைக்கிறார். அவையாவன: (1) ஒவ்வொரு திருவாய்மொழி பதிகத்திலும் பிரதிபாதி3க்கப்பட்டிருக்கிற எம்பெருமானின் திருக்கல்யாண கு3ணங்களை அநுஸந்தி3க்க வ்யாஜமாக ஒரு ப்ரபந்தம் வேண்டியிருப்பது; (2) திருவாய்மொழியாம் தேனின் தாத்பர்யார்த்தங்களை சங்கி3ரஹமாகவும், சஞ்க்ஷிப்தமாகவும் தமிழில் எடுத்துரைக்க வேண்டியிருப்பது; (3) எம்பெருமானாரின் கல்யாண கு3ணங்களை அநுஸந்தி3க்க நிரதி போ4க்3யமாக அமைந்திருக்கும் இராமாநுச நூற்றந்தாதியாகிய பிரபந்த நடையில் ப்ரபன்ன ஜந கூட2ஸ்தரான  ஆழ்வாருக்கும் ஒரு பிரபந்தம் அமையவேண்டியிருப்பது; (4) திருவாய்மொழி பதிகங்களுக்கு யிடையேயான ஸங்க3தியை (ஸம்பந்தத்தை) எடுத்துக் காட்டுவதற்காண அவசியம் இருப்பது. மேற்படி, இப்படித் தான் ஏறிட்டுக்கொண்ட கட்டுப்பாடுகளிக்கிடையில் எவ்வாறு மாமுநிகள் பிரபந்தம் அருளிச்செய்ததற்கான மேற்கூறிய நோக்கங்களையும் அடைகிறார் என்பதை மூன்று உதா3ஹரனங்கள் கொண்டு நோக்குவோம்.

எம்பெருமானின் எண்ணற்ற திருக்கல்யாண கு3ணங்களில் சிலவற்றை ஆழ்வார் திருவாய்மொழியில் அனுஸந்தி3த்திருப்பதாக ஆசார்ய ஹ்ருத3யம் எனும் கி3ரந்த2த்தில் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் விளக்கியுள்ளார். திருவாய்மொழியை அநுஸந்தி3க்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு எம்பெருமானின் திருக்கல்யாண கு3ணங்களையும் சேர்த்து அநுப4விப்பதற்கு ஹேதுவாய் மாமுநிகள் இந்த பிரபந்தத்தின் பாசுரங்களிலேயே *அரியனலன் ஆராதனைக்கென்று* என்னுமிடம் அவன் ஸ்வாராத4த்வத்தையும், *திறமளிக்கும் சீலத்திருமால்* என்னுமிடம் அவன் சௌசீல்யத்தையும், *ஓரேதுவறத் தன்னைத் தருமாறு* என்னுமிடம் அவனுடைய நிர்ஹேதுக கிருபையையும், *திருமால் பரத்துவத்தை நண்ணி அவதாரத்தே நன்குரைத்த* என்னுமிடம் அவதாரத்தில் பரத்துவத்தையும், *பேற்றுக்கு உபாயம் உன்தன்பேரருளே* என்னுமிடம் அவனுடைய ஔதா3ர்யத்தையும் அருளிச்செய்து  போந்திருக்கிறார். இவ்வாறு திராவிட வேதாந்தத்தின் தாத்பர்யார்த்தங்களுடன் எம்பெருமானின் திருக்கல்யாண கு3ணங்களையும் ஒன்றுசேர அநுப4விக்கும்படி இந்த பிரபந்தத்தை ஸாதித்தருளியுள்ளார்.

வார்கடா அருவி என்கிற திருவாய்மொழி பதிகத்தில் பராங்கு நாயகி திருசிட்டாற்றில் கோவில்கொண்டுள்ள எம்பெருமானின் ஶௌர்யத்தை அநுப4விப்பதாக பிரகரணம்  அமைந்துள்ளது. எம்பெருமானுக்கு அஸுரர்களால் ஏதேனும் தீங்கு விளைந்துவிடுமோ என்றெண்ணி 4 ங்கை அநுஸந்தி3த்துக் கொண்டிருந்த பராங்கு நாயகிக்கு, எம்பெருமான் தன்னுடைய கிருஷ்ணாவதாரத்தில் கம்ஸ, சாணுராதிகளை நிரஸித்த ஶௌர்யத்தை வெளிப்படுத்த, ஆழ்வாரும் அவர் சௌந்த3ர்யத்தை அநுப4வித்தவண்ணம் இருந்தார். இவ்வாறு கிட்டிய அநுப4வம் வெறும் மானஸாநுப4வமாக மட்டுமே இருந்ததால், இந்த பதிகத்தை தொடரும் மாயக்கூத்தா பதிகத்தில், எம்பெருமானின் தி3வ்ய மங்க3 ஸ்வரூபத்தை காணப்பெறாமல், ஆற்றாமை விஞ்சி, ஆழ்வார் அவஸன்னராகிறார்.  இந்த பிரபந்தத்தின் 75ஆவது பாசுரத்தில் *மாயன்வடிவழகைக் காணாதவல்விடாயாய் அதறவிஞ்சி அழுதலற்றும்* என்று இவ்விரு திருவாய்மொழிகளுக்கும் உள்ள தொடர்பை மாமுநிகள் திண்ணமாக அருளிச் செய்திருக்கிறார்.

*பத்துடை அடியவர்க்கு எளியவன்* எனும் திருவாய்மொழி பதிகத்தில் நம்மாழ்வார் கிருஷ்ணாவதாரத்தின் எளிமையில் ஆழங்கால்பட்டு மூவாறு மாதம் மோஹித்து கிடந்திருப்பதாக பதிகத்தின் பிரகரணம் அமைந்திருக்கிறது. இந்த பதிகத்தின் தேறிய கருத்து யாதெனில் எம்பெருமான் ஶ்ரித ஸுலப4னானவன்; தன்னையே தாழவிட்டுக்கொண்டும் தன்னிடம் பக்தி அநுஷ்டிப்போரை ஏற்றுக்கொள்பவன் என்பதுவாம். இவ்விடம் திருவாய்மொழி ஈடு வ்யாக்யாநத்தில் அமைந்திருக்கும் நம்பிள்ளையின் சொற்றொடர் ஈண்டு நோக்கத்தக்கது. “உயர்வற உயரும் பெருந்திறல் கொண்டவனும், நம் புலன்களுக்கு விஷயமாகதவனுமான எம்பெருமான், தாழ்ந்த நிலையில் அநர்த்தப்பட்டு கிடக்கும் ஸம்ஸாரிகளை உஜ்ஜீவிப்பிக்கைக்காக, அவர்களுக்கு ஸமமாக வந்து அவதரித்து, அவன் வடிவழகை இவர்கள் கண்ணுக்கு யிலக்காக்கி, அவனிடம் பக்தி அனுஷ்டிக்கும்படி பண்ணுகிறான்என்று வியாக்யாநமிட்டுள்ளார் ஸ்வாமி நம்பிள்ளை. நம்பிள்ளையின் வியாக்யாநத்தையே அநுவதி3த்து இந்த பதிகத்தை அருளிச்செய்யுமிடம் மாமுநிகளும் ஒருமிடராக *பத்துடையோர்க்கென்றும் பரனெளியனாம் பிறப்பால் முக்திதரும்* என்றருளிச் செய்திருக்கிறார். தன் திருவடியை பற்றுவோருக்கு முக்தியளிக்க வல்ல ஸர்வேஶ்வரனிடம் எவ்வாறு இந்த பக்தியை அநுஷ்டிக்கவேண்டும் என்கிற கேள்வி இங்கு எழுகிறது. இதற்கு பதில்கூறும் விதமாக மாமுநிகள் *மூண்ட அன்பால் பத்தி செய்* என்று ஸாதித்துள்ளவிடம் அவருடைய வசந விமர்த்தை காட்டுகிறது. அதாவது, அவனிடம் செய்யும் பக்தியானதை விதி4 ப்ரேரிதமாக செய்யாமல் அவன் மேலுள்ள அதீத ப்ரீத்தியினடியாக அநுஷ்டியுங்கள் என்கிற தார்பர்யார்த்தத்தைமூண்ட அன்பால்என்கிற இரு ப்தத்தில் மாமுநிகள் அருளிச்செய்துள்ளார்.

மேலே பிரதிபாதி3க்கப்பட்டிருக்கிற உதா3ஹரனங்களைக் கொண்டு, ஈடு வ்யாக்யாநத்தில் மாமுநிகளுக்கு இருந்த ஆளுமையையும், ஒரு பதிகத்தின் தேறிய கருத்தை சங்கி3ரஹேன அருளிச்செய்யும் திறமையையும், இரு பதிகங்களுக்கிடையே உள்ள ஸம்ப4ந்த3த்தை யுரைக்கும்  வல்லமையும், ஒரு பதிகத்தின் தாத்பர்யார்த்தத்தை சில வார்த்தைகளில் அடக்கக்கூடிய எழுத்து ஸாமர்த்தியத்தையும் நம்மால் உணரமுடிகிறது. இந்த திவ்யப் பிரபந்தத்தின் வாசியறிந்தே நம் முன்னோர்கள் இதை அநவரதம் அநுப4விக்கவேண்டுமென்று  நித்யாநுஸந்தே3யமாக கொண்டுள்ளார்கள்.

ஆளவந்தார் அருளிச்செய்த முக்தகம்

ஆளவந்தார் பெருமாள் கோவிலுக்கு எழுந்தருளின காலத்தில், யாதவப்ரகாசர் பக்கலிலே வேதாந்தம் அதிகரித்துக் கொண்டிருந்த உடையவர் விரைவில் ஸித்தாந்த ப...